Thursday, 26 March 2020

மது அருந்த வேண்டாம்!

கார்த்திக், ரித்திகா இருவரும் கணினி பொறியாளர்கள். மும்பையில் இருந்து தங்களது சொந்த ஊரான சென்னைக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
பயணத்தின் போது நடைபெறும் உரையாடல்களை ரசிக்கும் தன்மை கொண்டவர் இருவரும். 

வேலை நாட்களில் வேலைப்பளு காரணமாக தங்களுக்குள் பேசுவதற்கான நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆதலால் இந்த நெடுந்தூரப் பயணத்தில் பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

எதையும் உன்னிப்பாக கவனிக்கும் பழக்கம் கொண்டவன் கார்த்திக். தங்களது தொழிற் சூழலில் Social drinking இயல்பான ஒரு பழக்கமாக இருந்தது. ஆனால் கார்த்திக் மட்டும் அப்பழக்கத்திற்கு அடிமை ஆகவில்லை.
ரித்திகா அவனிடம், " எல்லோரும் குடிப்பதற்கு ஆயிரம் காரணம் சொல்வார்கள், நீ குடிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல் பார்ப்போம்." என்றால் விளையாட்டாக.

அவளைப் பார்த்து சிறு புன்னகை செய்த கார்த்திக், தான் குடிப்பதை விரும்பாததற்கான காரணத்தை கூற ஆரம்பித்தான்.

" நான் கல்லூரியில் படிக்கும் பொழுது, ஒரு தன்னார்வ நிறுவனத்தில் பகுதி நேர தன்னார்வலராக செயலாற்றிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு நாள், ஒரு தனியார் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. எதைப் பற்றிய கருத்தரங்கு என்று கூட அறியாமல் நண்பர்களுடன் சென்று அமர்ந்தேன். மேடைக்குப் பின்னால் இருந்த சுவரொட்டியில் 'டைப் 1 நீரிழிவு 'என்று எழுதப்பட்டிருந்தது.  அங்கு மேடையில் ஒரு கல்லூரி மாணவி இன்சுலின் பற்றியும், தனது குறைபாடுகள் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார். முன்வரிசையில் மருத்துவர்கள் பலர் அமர்ந்திருந்தனர். 

நிகழ்ச்சியில் இடைவெளியின் போது மருத்துவர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மருத்துவரிடம் இக் குறைபாடு எதனால் உருவாகிறது என்று கேட்டேன். அதற்கு அவர், இது ஒரு Auto Immune Disease என்றும், விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நமது நோய் எதிர்ப்பு சக்தியே, நம் உடலில் உள்ள அணுக்களை அழிப்பதனால் ஏற்படும் குறைபாடு என்றார். Beta cells இல்லாததால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாடு என்று விளக்கினார். 

இதுபோல பல வியாதிகள் உடம்பில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களில் ஏதோ ஒரு குறிப்பிட்ட அணுக்கள் தங்களுடைய செயலை செய்யாததால் பல குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும், அதற்கான தீர்வை நோக்கி மருத்துவ ஆராய்ச்சியில் பல மருத்துவர்கள் தங்களது வாழ்வை அர்ப்பணித்து செயலாற்றிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

உடம்பில் ஒரு குறிப்பிட்ட அணுக்கள் செயல்படாததற்கு, அம்மாணவி கூறிய துன்பங்களையெல்லாம் எண்ணி மனதில் வருத்தப்பட்டேன். அங்கிருந்த இளம் பருவத்தினர் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்தேன். மறுபக்கம் மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை அறிய அயராது முயன்று கொண்டிருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்தேன்.

அந்த கருத்தரங்கம் நிறைவுற்று வீடு சென்று கொண்டிருக்கும் மாலை வேளையில், மதுபானக் கடையில் இளைஞர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர், நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் தங்களது அணுக்களை பாழ்படுத்துவதற்காக.

சிந்தித்துப் பார்த்தேன். என்னிடம் இருக்கும் ஒன்றை, இன்னொருவர் தன் வாழ்க்கையில் கிடைத்துவிடாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை, நான் அற்பமாகக் கருதி எந்த ஒரு காரணமும் இன்றி பாழ்படுத்துவது, இயற்கை தர்மத்தின்படி தவறு என்று உணர்ந்தேன். அந்த ஒன்று எனது உடல்நலம்.

Stress ஐ காரணம் காட்டி குடிப்பவர்கள், தங்கள் மனசாட்சியின் குரலை அடக்க, தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் ஒரு போலி காரணம் அது.

இதற்குமுன் நாம் கிரிக்கெட் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் ல, அப்பொழுது நம்ம தல தோனியை பிடிக்க பல காரணம் சொன்னேன்ல, அவற்றில் முக்கியமான காரணம் தோனி மது அருந்த மாட்டார் என்பதுதான். அவருடைய தலை சிறந்த பண்புகள் இந்த பண்பு முக்கியமானது.

மக்களால் ரசிக்கப்படும் மனிதர்களில் வெகுசிலரே இது போன்ற நற்பண்புகளை கொண்டுள்ளனர்.
தல தல தான்,ரித்திகா.

கார்த்திக் சொல்லும் அனைத்தையும் அமைதியாக தன் கணவனை ரசித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தாள் ரித்திகா.

ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. இருவரும் தங்களது வட்டத்தில் வாழும் மனிதர்களிடம்,

'இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களின் உயிரணுக்களும் இயற்கையின் பேரதிசயம். அவற்றுள் எந்த ஒரு  உயிரணுவை காரணம் இன்றி அழிப்பதும், செயல்படாமல் செய்வதும் இயற்கை தர்மத்தின்படி குற்றமே.'

என்ற கருத்தை கொண்டு சேர்ப்பது என்று தீர்மானித்தனர்.


6 comments:

  1. அற்பத்தை நோக்கி அற்புதத்தை இழக்கின்றோம் வாழ்வில்

    நன்று தோழா....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உண்மையை அழகாக சொல்லியிருக்கீங்க நண்பா

    ReplyDelete
  4. Good beginning,, keep writing 👍😊

    ReplyDelete
  5. Awesome da....keep writing

    ReplyDelete