வணக்கம் மக்களே!
இங்கு பகிரப்பட்டுள்ள பனைமரம் குறித்த கேள்வி பதில்கள் whatsapp செயலியில் திருச்செங்கோடு திரு. தமிழ்ச்செல்வன் அவர்களால் அனுப்பப்பட்டது.
இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
1) வயலை சுற்றி வேலியாக எத்தனை அடி இடைவெளியில் பனை விதையை ஊன்ற வேண்டும்?
பொதுவாக பனைமரம் அடிப்பகுதி 2 அடி விட்டம் உடையதாக இருக்கும். அந்த வகையில் இரண்டு பனைமரம் இடையே 5 அடி குறைந்தபட்சம் இடைவெளி தேவை. அடர்ந்த வேலியாக வேண்டுமென்றால் 5 அடி இடைவெளியில் விதை ஊன்றலாம். பனைமரம் மேலே செல்லும் பொழுது ஒன்றுக்கொன்று ஒவ்வொரு திசையில் சாய்ந்து சூரிய ஒளி எடுத்துக் கொள்ளும். 6 அடி இடைவெளி நல்லது.
2) ஏரி குளக்கரையை சுற்றி எத்தனை அடி இடைவெளியில் பனை விதையை ஊன்ற வேண்டும்?
மேலே கூறிய பதில்.
இங்கு கொஞ்சம் அடர்த்தியாகவே ஊன்றலாம்.
3) ஆண் பெண் பனைமரம் விதையிலேயே அறிய முடியுமா?
ஆதாரபூர்வ உறுதி தகவல் எதுவுமில்லை.
பனம்பழம் ல ஒரு விதை பனம்பழம், இரண்டு விதை பனம்பழம், மூன்று விதை பனம்பழம் மற்றும் மிக அரிதாக நான்கு விதை பனம்பழம் என இருக்கும். ஒரு விதை கொண்டது ஆண் அல்லது பெண், இரண்டு விதை கொண்டது ஒன்று ஆண் ஒன்று பெண், மூன்று விதை கொண்டது
ஒன்று ஆண் ஒன்று பெண் ஒன்று ஆண் அல்லது பெண் என இருக்குமென பேச்சு வழக்கில் நமக்கு தகவல் கிடைக்கிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி எல்லாம் மேற்கொள்ள வேண்டாம். இயற்கையில் ஆண் பெண் மரம் எண்ணிக்கை தேவை இயற்கை முடிவு செய்யும்.
4) பனை விதையை எப்படி ஊன்றுவது?
இது மண்ணின் தன்மை, மழை அளவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. பனைமரம் கீழே விழும் அனைத்து விதைகளும் தானாக முளைத்து கிடந்ததை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். சுட்டு சாப்பிட்டு விட்டு சும்மா வீசி எறிந்த பனை விதைகள் எல்லாம் முளைத்து மரமாகி உள்ளதை பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐப்பசி அடைமழை ஏனோ தவறி விட்டது. பருவமழையிலும் சூழலிலும் நிறையவே மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால் சோதனை முயற்சியாக தண்ணீர் ஊற்றுதல், தொழு உரம் இட்டு விதையை ஊன்றுதல் போன்றவற்றை செய்யலாம். அரை அடி குழி எடுத்து விதையை படுக்கையாக போட்டு முழுமையாக மண்ணால் மூடினால் போதும். நல்ல ஒரு உழவு மழை பெய்யும் வரை தண்ணீர் எதுவும் நீங்க கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால் நீங்கள் கொடுத்த தண்ணீரால் முளைத்து பின்னர் ஈரம் போதாததால் முளைப்பு கருகி விடும்.
5) மரக்கன்று நாற்று போல பிளாஸ்டிக் பை ல முளைக்க வைத்து நடலாமா?
முயற்சி செய்ததில்லை.
நிறைய பேர் கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் விதையை ஊன்றி ஐம்பது போன்ற எண்ணிக்கையிலேயே முளைத்துள்ளதாக கூறுகின்றனர்.
விதை முளைப்பு ல இருவகை. கொஞ்சம் ஈரம் இருந்தாலே முளைப்பது, போதுமான நல்ல ஈரம் இருந்தால் மட்டுமே முளைப்பது. பனை விதை கொஞ்சம் ஈரம் இருந்தாலே முளைப்பு வந்து விடும். தொடர்ச்சியாக மழை இல்லாவிட்டால் முளைப்பு கருகி விடும்.
6) பனங்கிழங்கு எப்படி உருவாக்கலாம்?
2 அடி உயர மண் மேடை அமைத்து அதன் மீது இடைவெளி இல்லாமல் நெருக்கமாக பனை விதைகளை படுக்கை வாக்கில் வைத்து மீண்டும் அவற்றின் மீது ஒரு வரிசை அதே போல நெருக்கமாக வைத்து பனை விதைகளை முழுமையாக மண்ணால் மூடி விட வேண்டும். தண்ணீர் விட தேவையில்லை.
*ஏற்கனவே மேலே கூறியுள்ளேன்.
மழை பெய்யும் பொழுது முளைத்துக் கொள்ளும். பொலபொலப்பான மண் வகையாக இருந்தால் கிழங்கு பறித்தெடுக்க எளிமையாக இருக்கும். போதுமான மழை பெய்ததிலிருந்து மூன்று மாதம் கழித்து பனங்கிழங்கு பறித்தெடுக்கலாம்.
7) சீம்பு என்பது என்ன?
மூன்று மாதம் கழித்து நன்கு விளைந்த பனங்கிழங்கு கிடைக்கும் பொழுது அந்த பனை விதையை இரண்டாக வெட்டினால் உள்ளே தண்ணீர் நிறைந்த வெள்ளை நிறத்தில் சலசலப்பாக சீம்பு இருக்கும். இது இனிப்பு இல்லாமல் வெறும் தண்ணீராக இருக்கும்.
பனை விதை முளைப்பு வந்து கிழங்கு உருவாகும் தொடக்கத்தில் அதாவது ஒரு மாத காலத்தில் அந்த பனை விதையை வெட்டினால் உள்ளே கெட்டியாக சீம்பு இருக்கும். நல்ல இனிப்பு சுவையுடன் இருக்கும். சில விதைகள் தொடக்கத்தில் முளைத்து ஏதோ ஒரு காரணத்தால் முளைப்பு கருகி மூன்று மாதம் கழித்து பனங்கிழங்கு தோண்டுகையில் வெறும் விதையாக சில இருக்கும். அவற்றின் முளைப்பு கருகி முளைப்பு சிறிய உருண்டையாக இருக்கும். அவற்றை வெட்டினால் நல்ல கெட்டியான சுவையான சீம்பு கிடைக்கும்.
நமக்கு தேவைப்பட்டால் தொடக்கத்திலேயே முளைப்பைக் கிள்ளி விட்டு மண்ணை போட்டு குவியலாக மூடி வைத்து இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் கழித்து எடுத்து வெட்டி சாப்பிடலாம்.
8) பனைமரம் முளைத்து வரும் பொழுது ஆடு மாடு சாப்பிட்டு தொந்தரவு கொடுக்குமா?
ஆடு மாடு கொஞ்சம் சாப்பிடும். ஆனால் அதனை தாண்டி பனைமரம் உருவாகி விடும். தொந்தரவு இல்லை.
9) பனைமரம் காய்க்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?
பொதுவாக நம் பகுதியில் 25 ஆண்டுகள் ஆகிறது.
10) பனைமரம் தொடக்க காலத்தில் அதாவது பத்து ஆண்டு பதினைந்து ஆண்டு இருபது ஆண்டுகளில் அதன் ஓலையை நீக்கி சுத்தம் செய்ய வேண்டுமா?
சில இடங்களில் அவ்வாறு செய்கின்றனர். அவற்றை விறகாக மற்றும் ஓலை பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். எடுக்காமல் விட்டாலும் தவறில்லை. நுங்கு உருவாகும் காலத்திற்குள் தானாகவே காய்ந்த ஓலைகள் விழுந்து விடும். ஆனால் தீ வைத்து சுத்தம் செய்வது மிக தவறு.
11) பனைமரம் எத்தனை ஆண்டுகள் இருக்கும்?
100 முதல் 120 ஆண்டுகள் இருக்கும்.
Content forwarded by: அன்னூர், திரு. அருண் குமார், அவர்கள்.
#panai #panaimaram
No comments:
Post a Comment